பதிவு செய்த நாள்
06
ஜூலை
2022
11:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் வயல்வெளிக்கு மத்தியில் புதர் மண்டிய மேட்டில் கண்டறியப்பட்டிருக்கும் துர்க்கை அம்மன் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஆறுமுகம், 62; இவரது குலதெய்வம் எதுவென்று தெரியாத நிலையில், ஜோசியர்களின் ஆலோசனைப்படி கிராமத்தில் உள்ள வயல்வெளிக்கு மத்தியில் புதர் மண்டிய இடத்தில் பிடி இருக்கி காளி பெயரில் குலதெய்வம் இருப்பதாகவும், அதனை கண்டறிந்து கோவில் கட்டி வழிபாடு நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து துக்கைமேடு என அழைக்கப்படும் புதர் மண்டிய பகுதிக்கு சென்று பார்த்த பொழுது, கம்பீரமான துர்க்கை அம்மன் இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்து ஜோசியர் கூறியதை போல் பிடிஇருக்கி காளி என்ற பெயரில் கடந்த 6 மாதமாக வழிபடத் தொடங்கியுள்ளனர். அதே பகுதியில் அம்மனுக்கு கோவில் கட்டுவதற்கான பணிகளும் துவங்கப்பட்டுள்ளது. கம்பீரமாக காட்சி அளிக்கும் துர்க்கை அம்மன் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் அப்பகுதியை ஆய்வு செய்து கூறியதாவது.
வயல்வெளிகளுக்கு மத்தியில், மரங்கள் அடர்ந்த மேடான பகுதியில், மிக அழகான, நேர்த்தியான இந்த துர்க்கை அம்மன் (கொற்றவை) பலகை கல்லில் அருள் பாலிக்கிறார். ஐந்து அடி உயரம், மூன்றரை அடி அகலம். தலையில் கர்ண மகுடம், காதில் பத்ரகுண்டலம், புன் சிரிப்புடன் காட்சி அருள்கிறார். சதுர் புஜம் அதாவது நான்கு கரங்களுடன், ஒரு கையில் பிரயோக சக்கரம், மற்றொரு கையில் சங்கு, மேலும் ஒரு கையில் அபய முத்திரை, மற்றொரு கரம் இடுப்பில் வைத்திருக்கிறாள். கைகளில் அடுக்கடுக்கான வளையல்கள். இத்துர்க்கையின் மிக முக்கியமான தனித்துவம் என்னவெனில் மிக அழகான கலைமான் பக்கத்தில் உள்ளது. அம்மனைப் போன்று கலைமானும் கலை நயம் மிக்கதாக இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்யும் எருமை தலையின் மீது பாதம் பதித்திருக்கும் அருமையான காட்சி. இது பல்லவர் கலைப்பணி. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். பழமையான கொற்றவையை பெரும்பாலும் வேளாண் சார்ந்த இடங்களில் தான் பார்க்க முடியும். புதர் மண்டிய இந்த மேட்டில் அமைந்திருக்கும் துர்க்கை இப்பகுதியில் மிகப்பெரும் வழிபாட்டு தளமாக இருந்திருக்கலாம் எனக் கூறுகிறார். தற்பொழுது பூஜைகளை முன்நின்று செய்து வரும் ஆறுமுகம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பிடிஇருக்கி காளி என்ற பெயருடன் வழிபட்டு வருகின்றனர். அதாவது இவளிடம் எந்த வேண்டுதல் வைத்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றும் தெய்வம் என்பதே இதன் பொருள் என்கின்றனர் இப்பகுதி வாசிகள்.