பதிவு செய்த நாள்
09
ஜூலை
2022
04:07
பெரம்பலுார், பெரம்பலுார் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையில் கி.பி. 17ம் நூற்றாண்டு நாயக்கர் கால தெலுங்கு மொழியில் அமைந்த துாம்பு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆய்வாளர் மகாத்மா செல்வபாண்டியன் ஆகியோர், பெரம்பலுார் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி பகுதியின் மேல் பகுதியில் கலி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இரட்டை துாணுடன் கூடிய துாம்பு கல்வெட்டு இருப்பதை கண்டனர்.
கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் முறைக்காக, படி எடுத்து தொல்லியல் அறிஞர் ராஜகோபால் மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள முனிரத்தினம் ஆகியோரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆய்வு செய்ததின் அடிப்படையில் அது, கி.பி. 17ம் நுாற்றாண்டை சார்ந்த நாயக்கர் கால கல்வெட்டு என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, மகாத்மா செல்வ பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: சங்க காலம் முதலே அரசர்களும், நிர்வாக பொறுப்பில் இருந்தவர்களும் நீர் நிலைகளை உருவாக்கி அதை பாசனத்திற்கும், பிற தேவைகளுக்கும் முறைப்படுத்த துாம்புகளை அமைத்துள்ளனர். இதற்கான, சான்றுகளை சங்க இலக்கியங்கள் பல்லவர், சோழர், பாண்டியர், முதல் நாயக்கர் காலம் வரையிலான கல்வெட்டுகள் வழியாகவே அறியலாம். பொதுவாக ஏரிக்கரையில் இருந்து சற்று தொலைவில் ஏரியின் உட்பகுதியில் குமிழ் துாம்புகள் அமைக்கப்படும். ஏரியின் தரைமட்டத்தில் கருங்கற்களால் ஆன தொட்டி கட்டப்பட்டு, அதன் துளையின் மூலம் சுரங்க கால்வாய் வழியாக நீர் சென்று வெளியே இருக்கும் பாசன கால்வாயை அடையும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். பாசன தேவைக்கேற்ப வெளிச்செல்லும் நீரின் அளவை கூட்டவும், குறைக்கவும் துாம்புகள் உதவும்.
இதனை மேலும் கீழும் இயக்குவதற்கு ஏதுவாக கற்சட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் பொதுப்பணி துறையினர் ராட்சச ஷட்டர்களை, மதகுகளை அமைத்து நீர்நிலைகளை பராமரிக்க தொடங்கியதால், காலப்போக்கில் துாம்புகள் கைவிடப்பட்டன. மதகு பகுதியில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் பத்தடி உயரத்தில் இரண்டு துாண்களும் அவற்றுக்கு இடையில் குறுக்கு விட்டங்களும் காணப்படுகின்றன. வடபுறம் உள்ள துாணில் வெளிப்புறத்தில் ஏழு வரிகளில் அமைந்த தெலுங்கு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.வியய சம்வஸ்தரம் வையா சி நெல 29 தி தமன்யம் வெங்க்கடசய்யா செய்ன்சி ந துாம்புசுப மஸ்து. என குறிப்பிடப்பட்டுள்ளது இதன் பொருள் "வியய ஆண்டு வைகாசி மாதம் 29ம் தேதி தமன்யம் வெங்க்கடசய்யா செய்து வைத்த துாம்பு என்பதாகும். இதன் காலம் கி.பி. 17ம் நூற்றாண்டு ஆகலாம். பெரம்பலுார் மாவட்டத்தில் சாத்தனுாரில் 12ஆம் நூற்றாண்டு அளவில் அரங்கன் அணியன் சாத்தனுாருடையான், கொளக்காநத்தத்தில் 13ம் நுாற்றாண்டு அளவில் ஊற்றத்துாரை சேர்ந்த சுருதிமான் ஜனநாதன் அரைய தேவன் ஆன வாணவி சாதிர நாடாழ்வான், அம்மாபாளையத்தில் 13ம் நூற்றாண்டு அளவில் நாவறப்ப ந நங்கிழான் நாயன் சேதியன் ஆகிய பெருமக்கள் துாம்புகளை செய்து வைத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் வழி அறிய வருகிறோம். இவற்றின் வழியாக பல்வேறு நுாற்றாண்டுகளுக்கு முன்பே நம் மாவட்டத்தில் நீர் மேலாண்மை மிகச்சிறப்பாக பேணப்பட்டு வந்ததை அறிய முடிகிறது. எனவே, தமிழக அரசு இந்த துாம்பினை வரலாற்று சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் இவ்வாறு கூறினர்.