பதிவு செய்த நாள்
11
ஜூலை
2022
11:07
சென்னை : அமர்நாத் யாத்திரை சென்ற போது நிலச்சரிவில் இருந்து தப்பிய, தமிழகத்தைச் சேர்ந்த, 25 யாத்ரீகர்கள், பாதுகாப்பாக தமிழகம் வந்தடைந்தனர்.
துாத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பெண்கள் உட்பட 25 பேர், அமர்நாத் யாத்திரை சென்றனர்.அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு ஆபத்தில் இருந்து தப்பிய அவர்கள், தரிசனத்தை நிறைவு செய்து, நேற்று அதிகாலை சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில், அவர்கள் அளித்த பேட்டி:தமிழகத்தைச் சேர்ந்த, 25 பேர் ஜூலை 3ல், சென்னையில் இருந்து புறப்பட்டு, 4ம் தேதி அமர்நாத் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற போது வானிலை சீராக இருந்தது. அமர்நாத்திலிருந்து, 6 கி.மீ., முன்னதாக உள்ள பஞ்சதரணி என்ற பகுதியில் இரவு தங்கினோம். அடுத்த நாள் காலை அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்தோம். தரிசனம் முடித்து கீழே இறங்கிய போது, மழை பெய்யத் துவங்கியது. அதனால், அமர்நாத்தில் இருந்து கீழே இறங்க தடை விதிக்கப்பட்டது. நான்கு மணி நேரத்தில் மழை நின்றதால், கீழே இறங்க அனுமதித்தனர். மீண்டும், 6, 7ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், நாங்கள் தங்கியிருந்த பகுதி முழுதும் மண் சரிவு ஏற்பட்டது. அங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. 10 அடிக்கு ஒரு ராணுவ வீரர் நின்று, யாத்ரீகர்களை வரிசையில் அனுப்பினர். எந்த வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை; ராணுவத்தினர் மிகச் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தரிசனம் முடிந்து பாதுகாப்பாக தமிழகம் திரும்பி உள்ளோம். எங்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த ராணுவத்தினருக்கு நன்றி.இவ்வாறு அவர்கள் கூறினர்.