பதிவு செய்த நாள்
11
ஜூலை
2022
06:07
பல்லடம்: பல்லடம் முத்துமாரியம்மன் கோவிலில், வராகி அம்மன் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. வராஹி அம்மனுக்காக கொண்டாடப்படும் இந்த விழாவில், வராஹி அம்மனுக்கு ஒன்பது நாட்கள் விசேஷ வழிபாடுகள் ஆராதனைகள் நடைபெறும். மேற்கு பல்லடம், முத்துமாரியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஜூன் 29 அன்று நவராத்திரி விழா துவங்கியது. எதிரிகள் அச்சம், பயம், வழக்கு உள்ளிட்டவற்றில் இருந்து காத்து, நன்மை தரும் இந்த நவராத்திரி நாட்களில், தினசரி, சிறப்பு வேள்வி வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும், பொங்கல் வைத்து வழிபாடுகளும் நடந்தன. கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், வராஹி அம்மனுக்கான ஆஷாட நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் தான் என்றாலும், முத்துமாரி அம்மனின் உத்தரவுப்படி இங்கு, 11 நாட்களாக விழா கொண்டாடப்பட்டது. இதன்படி, ஜூன் 29ல் துவங்கிய விழா, நேற்று முன்தினம் நிறைவு பெற்றது என்றனர். சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன், ஸ்ரீமுத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.