பதிவு செய்த நாள்
18
ஜூலை
2022
11:07
பெத்தநாயக்கன்பாளையம்: அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி, 500 ரூபாய் நோட்டுகளால், இரண்டு லட்சம் ரூபாய் கொண்ட ‘பண மாலையை’, முத்துமலை முருகன் சுவாமிக்கு அணிவித்து தரிசனம் செய்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் சுவாமி சிலை உள்ளது. ஆடி பிறப்பையொட்டி நேற்று நடந்த சிறப்பு பூஜையில், அ.தி.மு.க., இடைக்கால பொது செயலர் பழனிசாமி பங்கேற்றார். பூரண கும்ப மரியாதையை ஏற்று, மூலவர் முருகனுக்கு பால், பன்னீர் அபிஷேக பூஜை செய்தார். தொடர்ந்து நடந்த பூஜையின்போது, 500 ரூபாய் நோட்டுகளுடன், இரண்டு லட்சம் ரூபாய் கொண்ட பண மாலையை மூலவருக்கு அணிவித்தார். தொடர்ந்து, 2.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான அடுப்பு, சமையல் பாத்திரங்களை வழங்கினார். பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில், 5 அடி உயர வெள்ளி வேல் வழங்கப்பட்டது. பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனிசாமி ஏற்பாட்டில், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு அவர் உணவு பரிமாறினார்.