பதிவு செய்த நாள்
18
ஜூலை
2022
05:07
ஊத்துக்கோட்டை, : ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்களால், போக்குவரத்து நெரிசல், குடிக்க குடிநீர், இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.
பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.நேற்று முதல் வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, 16ம் தேதி சனிக்கிழமை இரவு முதல் பக்தர்கள் பெரியபாளையம் வரத் துவங்கினர்.குடும்பத்துடன் வந்த பக்தர்கள் தங்குவதற்கு தனியார் கட்டடங்களை நாடிச் சென்றனர். நேற்று காலை பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
அதிகளவு வாகனங்களால் பெரியபாளையம் - -ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.சனிக்கிழமை இரவு துவங்கி, நேற்று வரை, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதனால் கடைகளுக்குச் சென்று பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டனர்.மேலும், தற்காலிக கழிப்பறை வசதியும் செய்யவில்லை. சாலைகளில் பிளீச்சிங் பவுடர் எதுவும் தெளிக்கவில்லை. பக்தர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய ஒன்றிய நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வரும் ஞாயிற்றுக்கிழமை இதுபோன்று எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.