பதிவு செய்த நாள்
25
ஜூலை
2022
07:07
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கல்லூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, ஏழு ஆண்டுகளுக்குப்பின் கோலாகலமாக நடந்தது.
திட்டக்குடி அடுத்த கல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா, ஏழு ஆண்டுகளுக்குப் பின் கடந்த 17ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தினசரி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 22ம் தேதி பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள், பால்குடம், தீச்சட்டி ஏந்தி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் வார்க்கப்பட்டது. தேர் திருவிழாவையொட்டி 30லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக செய்யப்பட்ட சித்திரை திருத்தேரில், அம்மன் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தேரோடும் வீதிகள் வழியாக அம்மன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கிராம முக்கியஸ்தர்கள் கலியன், சுப்ரமணியன், ஆறுமுகம், கொளஞ்சி, முத்துகொளஞ்சி, பழனிமுத்து, பரமசிவம், சுப்பிரமணியன் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், சென்னை வாழ் இளைஞர்கள் விழாவில் பங்கேற்றனர். கல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.