அய்யாவாடி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2022 06:07
மயிலாடுதுறை : அய்யாவாடி ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெற்ற நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்சபாண்டவர்களும், ராவணன் மகன் மேகநாதன் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களைப் பெற்றுள்ளனர். இக்கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவர் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆடி அமாவாசையான இன்று ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியை கோவில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு ஜெபம் மற்றும் ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு மங்கள வாத்தியம் இசைக்க 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோவில் தலைமை அர்ச்சகர் தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.