பால். நெய்: ஸ்ரீரங்கம் கோயிலிலே பாலும் நெய்யும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பெருமாள் கோயிலிலே விளக்குக்கும், தளிகைக்கும் எண்ணை எதையும் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. மாறாக
அமுதுபடிகளுக்கும், விளக்குகளுக்கும் சுத்தமான பசுநெய்யே பயன்படுகிறது. அதனால்தான் பெருமாள் கோயிலுக்குள் புகுந்த உடனே நறுமனம் கமழும் நெய்வாசம் வந்து நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.
ஸ்ரீரங்கம் கோயிலிலே தயாராகும் அனைத்து பட்சணங்களும் நெய்யிலேயே தயாரவதும் தனிச்சிறப்பு. இக்கோயிலில் அதிக அளவில் நெய்யை சேமித்துவைக்க இரண்டு பிரமாண்ட தொட்டிகள் உள்ளது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும். நெய்க்கிணறு என்றே அழைக்கப்படும் இந்த பிரமாண்ட தொட்டிகள் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தின் கிழக்கில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் இன்றும் உள்ளன. இந்த நெய்க் கிணற்றை காணும்போது, அந்நாளில் ஸ்ரீரங்கத்தில் பாலும்,நெய்யும் குறைவின்றிக் கிடைத்ததை அறியலாம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆதிசேஷனான பாம்பனை மேல்தான் பள்ளி கொண்டுள்ளார். இந்த ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால்தான். அதனால்தான் தினமும், இரவு நேர அரவணைப் பூஜையின்போது, பெருமாளுக்கு அரவணையும், ஆதிசேஷனுக்கு பாலும் அமுது செய்விக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர மாலையில் நடைபெறும் ஷீரான்ன பூஜையின் போதும் பெருமாள் பால்சாதம் தான் அமுது செய்கிறார். இதிலிருந்தே ஸ்ரீரங்கம் கோயிலில் பாலுக்கும், நெய்க்கும் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது தெளிவாகிறது.