ஸ்ரீரங்கம் பெரியகோயில் உற்சவர் சுமார் 2 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். பஞ்சலோகத்திலான இந்த விக்கிரகத்தின் மீது தங்கக் கவசம் போர்த்தி பாதுகாக்கின்றனர். நான்கு கைகளுடன் காட்சியளிக்கும் இவருக்கு அழகிய மணவாளன் என்று பெயர், பல்வேறு காலக்கட்டங்களில் இவர் ஸ்ரீரங்கதைவிட்டு வெளியேறி பல ஆண்டுகள் நாடெங்கும் வைத்து பூஜித்து பாதுகாக்கப்பட்டு மீண்டு வந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் ஒரு முறை மீண்டு வந்தபோது அவரை உள்ளூர்க்காரர்கள் ஏற்க மறுத்து விவாதித்தனர் இதையடுத்து பார்வையற்ற ஒரு மூத்த சலவைத்தொழிலாளியால் அடையாளம் காட்டும்போது இவருக்கு, நம்பெருமாள் என்று பெயர் வந்தது என்பர். ஸ்ரீரங்கம் கோயிலில் திருமஞ்சனங்கள் யாவும் இவருக்கே செய்யப்படுகின்றன. அதிலும் இவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் போன்றவற்றால் திருமஞ்சனம் செய்யும் வழக்கமில்லை. மாறாக சுத்தமான சுடுநீரில் மட்டுமே இவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அந்த சுடுநீரில் நறுமணப்பொருட்களான பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் மட்டுமே சேர்க்கப்படுகின்றன. இந்த வெண்ணீர் திருமஞ்சனம் நடக்கும் இடத்தருகே அடுப்புக்கூட்டி மண்பானையில் வைத்தே சூடேற்றப்படுகிறது. வெண்ணீர் தயாரானதும் அதை மனியக்காரர் கைவிரலால் தொட்டு அதிகச்சூடு இல்லாமலும், அதேநேரம் குழந்தைக்கு ஏற்ற சூட்டில் இருக்குமாறு கை பக்குவம் பார்த்து அனுமதித்த பிறகே பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. திருமஞ்சன நேரத்தில் கைலி உடுத்தும் ஒரே பெருமாள், நம்கோயில் நம்பெருமாள் மட்டுமே என்பது சிறப்புச் செய்தி. நம்பெருமாள் டில்லி சுல்தானின் அரண்மனையில் இருந்தபோது அவர்களது வழக்கப்படி கைலி அணிவிக்கப்பட்டிருந்ததை குறிப்பால் உணர்த்துவதற்காக இவ்வழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.