திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி வடிவுடையாம்பாள் சமேத வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயில் பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஆடி மாதம் வயிரவருக்கு 11 நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். ஜூலை 23 ல் கொடியேற்றி, சுவாமிக்கு காப்புக் கட்டி பிரமோற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை 8:00 மணிக்கு வயிரவர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.10 மணிக்கு தேர்வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. திரளாக பக்தர்கள் பங்கேற்க கோயிலை தேர் வலம் வந்தது. இன்று காலை 11:00 மணிக்கு மேல் தீர்த்தவாரியும், தொடர்ந்து வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடும் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு பூப்பல்லக்கும் நடைபெறும். நாளை காலை 9:15 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 5.45 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்து பிரமோற்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை ஏழக பெருந்திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்கின்றனர்.