காஸ்யப முனிவர் புத்திரப்பேறுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். அதில் இந்திரன் தலைமையில் தேவர்கள், ரிஷிகள், வாலகில்யர்கள் என்னும் குள்ள முனிவர்கள் பங்கேற்றனர். குள்ள முனிவர்களைக் கண்ட இந்திரன் கேலியாகச் சிரித்தார். கோபம் கொண்ட வாலகில்யர்கள், ‘‘ஆணவம் வேண்டாம்! நாங்கள் நினைத்தால் புதிய இந்திரனை படைக்க முடியும்’’ என சவால் விட்டனர். பயந்து போன இந்திரன் முனிவரின் உதவியை நாடினார். “சக்தி வாய்ந்த வாலகில்யர்களைச் சமாதானம் செய்ய முயல்கிறேன்’’ என அவரும் வாக்களித்தார். ‘‘புதிய இந்திரனைப் படைக்க வேண்டாம். அதற்கு பதிலாக பறவைகளின் இந்திரனாக கருடனைப் படையுங்கள். அவன் மூலம் இந்திரனை தோற்கடிக்கச் செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார். அதன்பின் வாலகில்யர்கள் வழிகாட்டுதலுடன் யாகம் முடிந்தது. அதில் வைக்கப்பட்ட பிரசாதம் காஸ்யபரின் மனைவியான வினதைக்கு தரப்பட்டது. அதைப் பருகிய அவளுக்கு அருணன், கருடன் என்னும் குழந்தைகள் பிறந்தனர். பின்னாளில் கருடனே பறவைகளின் இந்திரனாக ‘பட்சிராஜன்’ என பெயர் பெற்றான். ஒருமுறை தன் தாய் வினதையின் உயிரைக் காப்பாற்ற தேவலோகம் சென்று இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை எடுத்து வந்தான். கருடனின் இந்த தீரச்செயலால் வாலகில்யர்களுக்கு இந்திரனால் ஏற்பட்ட அவமானம் நீங்கியது.