பதிவு செய்த நாள்
02
ஆக
2022
06:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சேதமடைந்த மரகேடயத்தில் சுப்பிரமணிய சுவாமி உலா வருவதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 23 முதல் ஆக., 8 வரை ஆடித்திருக்கல்யாணம் விழா நடக்கிறது. விழாவில் தினமும் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வரும் போது, மரகேடயத்தில் சுப்பிரமணியர் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வருவார். 4.5 அடி உயரம், 3 அடி அகலத்தில் உள்ள இக்கேடயத்தை சுப்பிரமணியர் கேடயம் என அழைக்கப்படுகிறது. இது 30 ஆண்டுக்கு முன் வடிவமைத்து உள்ளனர். இதன்பின் இக்கேடயத்தை மராமத்து செய்யாததால், தற்போது 4 மரதூணும் அரித்து சேதமடைந்தும், மேற்கூரை பலகை ஓட்டையாகியும், வீதி உலா போது பலவீனத்தால் கேடயம் அசைந்தபடி சத்தம் எழுகிறது. இதனால் இக்கேடயம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுபோல் கோயிலில் சண்டிகேஸ்வரர், நந்தீஸ்வரர், விநாயகர் மரகேடயங்கள் சேதமடைந்து உள்ளதால், உடைந்து விழும் தருவாயில் உள்ளது. ஓராண்டுக்கு ரூ. 12 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தும், சேதமடைந்த மரகேடயங்களை சரிசெய்ய கோயில் நிர்வாகம் முன்வராதது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.