பதிவு செய்த நாள்
02
ஆக
2022
05:08
ஆரணி: ஆரணி அருகே, பையூர் பொன்னியம்மன் கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூரிலுள்ள பழமையான பொன்னியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் தேரோட்டத்துடன் உற்சவம் நடப்பது வழக்கம். இக்கோவில் தேர் பழுதால் கடந்த, 18 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தவில்லை. கிராம மக்கள் சேர்ந்து நிதி திரட்டி, தற்போது, 30 லட்சம் ரூபாய் செலவில், 25 அடி உயரத்தில் புதிய தேர் செய்துள்ளனர். இதையடுத்து இந்தாண்டு, ஆடி உற்சவ விழாவில் தேரோட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். நேற்று பொன்னியம்மன் கோவிலில், ஆடி உற்சவம் தொடங்கிய நிலையில் வரும், 9ல் இரவு தேரோட்டம் நடக்க உள்ளது. இது குறித்து போலீசார், வருவாய், தீயணைப்பு, பொதுப்பணி, மின்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நேற்று, புதியதாக செய்த மரத்தேர், தேர் செல்லும் பாதை, சாலைகள் மற்றும் தாழ்வான மின்கம்பிகளை சீரமைத்தல், தேரோட்டம் நடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டித்தல், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஆரணி தாசில்தார் பெருமாள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.