கோவில் கதவை மூடியதால் பக்தர்கள் அண்டாவில் பாலை ஊற்றி வழிபட்டனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2022 04:08
தேவகோட்டை: தேவகோட்டை அருணகிரிபட்டனம் முத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நடந்து வருகிறது. சக்தி கரகம் தூக்குவதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சினை உள்ளது. கோர்ட் உத்தரவு, சமரச பேச்சு நடத்தி பலனில்லை. இதனால் நான்கு நாளில் திருவிழாவை நிறுத்தி கோவில் வெளி கேட்டை அதிகாரிகள் பூட்டினர். பக்தர்கள் கேட்டிற்கு வெளியே நின்று அம்மனை வழிபடுகின்றனர்.
நிறைவு நாள் சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம். நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்க தயாராக இருந்த நிலையில் பால்குடம் எடுக்க அனுமதிக்கவில்லை. வழக்கமாக புறப்படும் கைலாசவிநாயகர் கோவிலில் போலீசார் நிறுத்தப்பட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். விரதம் இருந்த பக்தர்கள் கோயிலுக்கு நேரிடையாக வந்து கேட்டில் மாலைகளை போட்டு கேட் அருகே வைக்கப்பட்ட அண்டாவில் பாலை ஊற்றி அம்மனை வழிபட்டனர். பல பக்தர்கள் கோவில் முன் வழிபட்டதோடு, சிலர் நிலைமையை எண்ணி கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில் கோவில் கரகம் தூக்கி நான்கு நாட்கள் வழிபட்ட நிலையில் கரகம் கரைக்காமல் கோயிலுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. திருவிழா முடிந்து காப்பு களையும் நிகழ்வு நடக்க வேண்டும். கரகம் கரைத்தால் தான் நடத்த முடியும் என்பதால் இரு தரப்பிலும் பேச்சு நடத்தி முடிவு எட்டப்படாததால் வேறு வழியின்றி பூசாரியே கரகத்தை தூக்கி சென்று கரைத்தார். இதனைத் தொடர்ந்து காப்பு களையப்பட்டது. பக்தர்கள் ஊற்றிய சுமார் 600 லிட்டர் பாலை மாலை பூஜையின் போது அபிஷேகம் செய்தனர் . அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வெளியே நின்று வழிபட்டு செல்கின்றனர்.