பதிவு செய்த நாள்
10
ஆக
2022
03:08
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழாவில் பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழா கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபோகம் நாளை தொடங்குகிறது.
இன்று மாலையில் இருந்தே விடியவிடிய பக்தர்கள் நேர்த்திகடனாக பொங்கல் வைப்பர். தொடர்ந்து, 12ந் தேதி வரை பொங்கல் வைக்கும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந்தநாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வர். அவர்கள் அம்மனை தரிசிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் (பொ) பரமேஸ்வரன் கூறியதாவது: கொரோனா காலத்தில் கோவிலில் விழா நடைபெறாமல் இருந்தது. தற்போது ஆடிவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக கோவிலுக்கு ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துவிட்டு செல்வர். இதை மாற்றி கோவிலின் தெற்கு நுழைவு வாயில்,பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் வழியாக பக்தர்கள் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரிசையில் நின்று அம்மனை தரிசிக்கும் வகையிலும், கூட்டம் நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுபாதை இரண்டும், சிறப்பு தரிசனத்திற்கு ஒரு பாதையும், வி.ஐ.பி. தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் ஏற்கனவே இருக்கும், 5 உண்டியல்களுடன், கூடுதலாக, 7 உண்டியல்கள் வைக்கப்படும். அர்ச்சனை கட்டணம், 2 ரூபாய், சிறப்பு தரிசனம், 10, பொங்கல் வைக்க, 2, மாவிளக்கு, 1, நேர்த்திகடன் பொம்மை வைக்க, 3 ரூபாய், அபிஷேக கட்டணம், 50 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. அபிஷேக சீட்டு இன்று முதல் வழங்கப்பட மாட்டாது. முடிகாணிக்கைக்கு, தேங்காய் உடைக்க கட்டணம் கிடையாது. கூடுதல் பாதுகாப்பு பணியில் டவுன் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு வாகனம், மருத்துவ குழுவினர் இருப்பர். பக்தர்கள் தரிசனத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.