பதிவு செய்த நாள்
13
ஆக
2022
03:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில் ஆடிவெள்ளித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 1108 பால்குடம், காவடிகள், தீச்சட்டி, அலகு குத்தி பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். நேற்று காலை 8:50 மணிக்கு செட்டியதெரு ராமர் மடத்திலிருந்து பக்தர்கள் 1108 பால் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். சிறுவர்,சிறுமி முதல் முதியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக பங்கேற்றனர். தொடர்ந்து தீச்சட்டி எடுத்தும், நீண்ட வேல், திரிசூலங்களை அலகு குத்தியும், சர்ப்ப காவடி, பறவைக் காவடியுடனும் பக்தர்கள் பங்கேற்றனர். வழியில் பக்தர்களுக்கு மஞ்சள் நீரால் பொதுமக்கள் பாத பூஜை செய்தனர். தொடர்ந்து நீர், மோர், பானகம் வழங்கி உற்சாகப்படுத்தினர். கோயில் முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் பலரும் தீமிதித்து அம்மனை பிரார்த்தித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மாலையில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாட்டினை செட்டியதெரு இளைஞர் குழுவினர் செய்தனர்.