மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 03:08
மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் கரகம் எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்கினர்.
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் விஸ்வகர்மா சமூக சங்கத்தினர் சார்பில் வருடந்தோறும் ஆடி கடைசி வெள்ளியன்று பொங்கல் உற்ஸவ விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு வெகு விமரிசையாக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை வைகை ஆற்றங்கரையில் ஏராளமான பக்தர்கள் பால்குடம்,கரகம் மற்றும் அலகு குத்தி முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து கோயில் முன்பாக பூக்குழி இறங்கினர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர். அன்னதானம் நடைபெற்றது,விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூக சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று மாலை முளைப்பாரி ஊர்வலமும், நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.