சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி பெரும் திருவிழா கடந்த ஆகஸ்ட் 5 கொடியேற்றத்துடன் துவங்கியது . ஆகஸ்ட் 12 அம்மன் வீதி உலா உடன் பெருந்திருவிழா நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முடி காணிக்கை செலுத்தவும் பொங்கலிட்டும் அம்மனை வழிபட்டனர். இந்தநிலையில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகியமூன்று தினங்கள் விடுமுறை தினங்களாக வருவதால் நேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பாதயாத்திரையாகவும் வேன், லாரி, பஸ், மூலமாகவும் இருக்கன்குடி வந்த பக்தர்கள், பொது மற்றும் சிறப்பு தரிசன வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வரிசை அர்ச்சனா நதி வரை நீண்டு இருந்தது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்தியும் பொங்கலிட்டும் கண் கை, கால், கண் மலர் செலுத்தியும் வழிபட்டனர். சாத்தூர் அருப்புக்கோட்டை விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்பட்டி சங்கரன்கோவில் தென்காசி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகின்ற காரணத்தால் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.