பதிவு செய்த நாள்
15
ஆக
2022
10:08
சென்னை : மோசடி பத்திரங்களை ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்தால், கோயில் நில அபகரிப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு ஆவணங்களை பதிவு செய்ய துணை போகும் சார் பதிவாளர்கள், சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருவரது சொத்தை, அவருக்கு தெரியாமல் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக, வேறு நபர்கள் விற்பனை செய்யும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்யும் விஷயத்தில், பொது மக்களை சார்பதிவாளர்கள் கடுமையாக அலைக்கழித்து வந்தனர்.
இதற்கு தீர்வாக, பதிவு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, மோசடியாக பதிவு செய்யப்பட்டது என்பதற்கான உரிய ஆதாரங்களை, சொத்தின் அசல் உரிமையாளர் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் சார் பதிவாளர், மாவட்ட பதிவாளர் விசாரணை மேற்கொண்டு, மோசடி பத்திரத்தை ரத்து செய்யலாம். இதில், மோசடி பத்திரத்தை பதிவு செய்வதும், அதற்கு எதிரான புகார்களை விசாரிக்க மறுப்பதும் என, சொத்து அபகரிப்பாளருடன் கூட்டு சேர்ந்து செயல்படும் சார் பதிவாளர்களுக்கு, மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க, வகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜனாதிபதி ஒப்புதல் அடிப்படையில், இந்த திருத்தங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும். பொதுவாக இதுபோன்ற புதிய சட்டங்கள், சட்ட திருத்தங்கள் அது நிறைவேற்றப்பட்ட நாளை அடிப்படையாக வைத்து அமல்படுத்தப்படும்.தற்போது, மோசடி பத்திரங்களை பதிவு செய்தது தொடர்பாகவும், அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்தது தொடர்பாகவும், 100 புகார்கள் விசாரணையில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளனர்.இதில் புகார்தாரர்கள் மீண்டும் புகார் அளித்தாலும், விசாரணை அதிகாரி நினைத்தாலும், புதிய சட்டத்திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். எனவே, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்தவர்கள், கோயில் நிலங்களை பதிவு செய்தவர்கள், நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்களின் மோசடி பத்திரங்களை பதிவு செய்தவர்களை, சிறைக்கு அனுப்பும் அளவுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.