திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக 8 முதல் 12 அடி உயர மெகா விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.
கொரோனா தடைக்கு பின் இந்தாண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஆர்டர்கள் குறைந்து விட்டது.மதுரை விளாச்சேரியில் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகித கூழ், சிமென்ட் ஆகியவற்றால் சுவாமி சிலைகள், பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாராகும் சிலைகள், பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.கொரோனா தடையால் 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கவில்லை. இந்தாண்டு ஊர்வலங்கள் நடக்க இருப்பதால் 4 முதல் 12அடி வரையிலான களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.சிலை தயாரிக்கும் பிச்சை கூறியதாவது: ஆண்டுதோறும் ஊர்வலத்திற்காக 20 முதல் 30 பெரிய விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்வோம். சிலைகள் தயாரிக்க கண்மாய் மண்ணை பயன்படுத்துவோம். தற்போது கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் ஏற்கனவே எடுத்து வைத்திருந்ததை பயன்படுத்துகிறோம்.இரண்டு ஆண்டுகளாக கொரோனா தடையால் சிலைகள் தயாரிக்கவில்லை. இந்தாண்டு சிலைகளுக்கு போதிய ஆர்டர்கள் வரவில்லை. விழா கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆர்டர் கொடுத்துள்ளவர்களுக்கு மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். பெரிய சிலைகள் தயாரிப்பதற்கு அதிகம் செலவாகும். ஆர்டர் வரும் என நம்பி தயாரித்து வைக்கவும் முடியவில்லை. விநாயகர் சதுர்த்திக்கு குறைவான நாட்களே இருப்பதே அதற்கு காரணம், என்றார்.