செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பதற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2022 10:08
செஞ்சி: செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் அம்மன் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ராஜாகிரி கோட்டை மீது கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. கோட்டையில் பல கோவில்கள் இருந்தாலும் இவற்றில் சிலைகளோ, வழிபாடோ இல்லை. ஆனால் கொட்டையின் காவல் தெய்வமாக வணக்கி வரும் கமலக்கன்னியம்மன் கோவிலில் மட்டும் இன்று வரை வழிபாடு நடந்து வருகிறது.
சித்திரை மாதத்தில் எறுமை கிடா வெட்டி, மிக விமர்சையாக தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். நேற்று காலை கோவில் பூசாரி ராமச்சந்திரன் பூஜைக்காக காலை 10 மணிக்கு சென்ற போது கமலக்கன்னியம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீடத்தில் இருந்த சிலையை பெயர்த்து கீழே தள்ளி இருந்தனர். அம்மனின் கால் பகுதி உடைந்திருந்தது. பூசாரி ராமச்சந்திரன் இதை யாரிடமும் சொல்லாமல் சிலையை சுவற்றில் சாய்த்து வழக்கமான பூஜைகளை செய்துள்ளார். பிறகு செஞ்சி கோட்டை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை பராமரிப்பு அலுவலர் நவீந்திரா ரெட்டி செஞ்சி போலீசில் புகார் செய்தார். இந்த தகவல் செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் நேற்று மாலை தெரியவந்ததும், இளைஞர்கள் சாலை மறியல் செய்ய திரண்டனர். ஊர் பெரியவர்கள் இளைஞர்களை சமாதானம் செய்தனர். இது குறித்து கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் ஏழுமலை தனியாக செஞ்சி போலீசில் புகார் செய்தார். கமலகன்னியம்மன் சிலை பீடத்தில் இருந்து பெயர்த்த நபர்கள் சிலையின் அடியில் உள்ள நவரத்தினம், தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்காக சிலையை எடுத்தனரா அல்லது சமூக விரோதிகள் வேண்டுமென்றே உடைத்தனரே என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் செஞ்சியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.