வண்டிகருப்பணசுவாமி கோயிலில் ரயிலை நிறுத்தி வழிபட்ட ஊழியர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2022 07:08
வடமதுரை: அய்யலூர் தங்கம்மாபட்டி வண்டிகருப்பணசுவாமி கோயிலில் ஆடி மாதத்தில் அதிகபட்சமாக நேர்த்திக்கடன் வழிபாடு நடப்பது வழக்கம். அரசு, தனியார் என பல வாகனங்களை கொண்டுள்ள துறையினர் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு நேர்த்திக்கடனாக கிடாய் வெட்டி வழிபட்டு, விருந்து சாப்பிட்டு செல்கின்றனர். ஆடி மாதத்தின் இறுதி நாட்கள் என்பதால் கடந்த மூன்று தினங்களாக ஏராளமானோர் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அருகில் திண்டுக்கல் திருச்சி ரயில் பாதை இருப்பதால் அவ்வழியே சென்ற எலெக்ட்ரிக்கல் பராமரிப்பு பிரிவு இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியை நிறுத்தி ஊழியர்களும் வழிபட்டு சென்றனர். கோயில் பூஜாரிகள் கூறுகையில், இக்கோயிலில் வாகனங்கள் விபத்தின்றி பயணிக்க வேண்டி செய்யப்படும் நேர்த்திக்கடன் வழிபாடுகளே அதிகம். இதுதவிர மற்ற நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உள்ளனர். மற்ற அரசு துறையினரை போல ரயில்வே எலெக்ட்ரிக்கல் பராமரிப்பு பிரிவு ஊழியர்களும் தங்கள் வந்த இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியை கோயில் முன்பாக சில நிமிடங்கள் மட்டும் நிறுத்தி வழிபட்டு புறப்பட்டு சென்றனர். ரயில் போக்குவரத்து இல்லாததை உறுதி செய்து பின்னரே ரயிலை நிறுத்தி வழிபட்டு சென்றனர் என்றனர்.