சபரிமலை, சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நேற்று தொடங்கியது. சபரிமலைக்கு உரிமைப்பட்ட இடம் அளவீடு செய்து கல் நாட்டும் பணியை நேற்று தேவசம்போர்டு தலைவர் தொடங்கி வைத்தார்.
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை திறந்தது. அன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. வரும் 21–ம் தேதி வரை இந்த பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை உண்டு. 21–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மலையாள வருட பிறப்பான நேற்று முதல் அடுத்த ஆடி மாதம் வரை ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலை தந்திரியாக கண்டரரு ராஜீவரரு நேற்று பொறுப்பேற்றார். சபரிமலையில் தேவசம்போர்டுக்கு சொந்தமான நிலத்தை கையப்படுத்துவதில் வனத்துறை தொடர்ந்து தடையாக இருந்து வந்தது. இதனால் பல வளர்ச்சிப்பணிகளும் நடத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டு சபரிமலையில் தேவசம்போர்டுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கல் நாட்டி உறுதி செய்யும் படி தேவசம், வனம் மற்றும் வருவாய்துறைக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மூன்று துறையினரும் இணைந்து நிலத்தை அளவீடு செய்யும் பணியை சன்னிதானத்தில் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நீண்ட காலமாக இருந்து வந்த வனம்–தேவசம்போர்டு மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கோர்ட் உத்தரவு படி பிரச்னை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி என்று அனந்தகோபன் கூறினார்.