நத்தம், நத்தம் பகுதி கிருஷ்ணர், கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் அன்னதான விழா நடந்தது.
வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் மூலவர் கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் மற்றும் தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் உற்சவர் கிருஷ்ணருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு லட்டு,சீடை, வெண்ணெய், தயிர் உள்ளிட்டவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோபால்பட்டி,சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கோவிலில் தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது.
நத்தம் மதுக்காரம்பட்டி கோகுல கிருஷ்ணன் கோவிலில் காலை பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோகுல கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், மதியம் அன்னதானம், சந்தன காப்பு அலங்காரம், மாலை கண்ணன் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நத்தம் கோவில்பட்டி பாமா ருக்மணி சமேத ராஜ வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கே.அய்யாபட்டியில் யாதவ இளைஞர் அணி சார்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்னதான விழா நடந்தது. மேட்டுக்கடை மல்லத்தான்பாறை கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா பூஜை மற்றும் ஆதி பரஞ்சோதி சகலோக சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.