பதிவு செய்த நாள்
12
ஜன
2011
03:01
ஆஞ்சநேயர் சீதாபிராட்டியைத் தேடும் போது, அவளை ஜனகபுத்திரி என்று குறிப்பிடுகிறார் வால்மீகி. ராமனின் பத்தினியான பிறகும், தந்தையாகிய ஜனகருக்கு இப்படி ஒரு மரியாதை கொடுப்பானேன்!ஜனகரின் மகிமை அத்தகையது...கடவுளுக்கே தந்தையாக தசரதர் இருந்தாலும் கூட, அவரையே வளர்க்கும் பேறு பெற்றாலும் கூட, ஒரு கட்டத்தில் மனைவியின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து, அடே ராமா! காட்டுக்குப் போ என்று சொல்ல வேண்டி வந்து விட்டது. இறைவனை வளர்ப்பதென்பதும் சரணாகதி தான் என்றாலும் கூட, தந்தை சொன்னால் மகன் கேட்டாக வேண்டும் என்ற அதிகார உணர்வை அவர் காட்ட வேண்டி வந்தது.ஆனால், மாமனார் அப்படியல்லவே! மருமகனே! என் மகளை காட்டுக்கு கூட்டிப் போகிறீர்களே! நீங்கள் செய்வது சரிதானா? வாழ வேண்டிய வயதில், காட்டில் வந்து என்ன சுகம் காணப் போகிறாள்? சரி...காட்டுக்குத் தான் கூட்டிப் போனீர்கள்! அங்கே, இன்னொருவன் வந்து கடத்திக் கொண்டு போகுமளவுக்கு கவனக்குறைவாக இருந்துள்ளீர்களே! இதெல்லாம் நியாயம் தானா? என்று அவர் கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. அதனால் தான் தந்தையை விட மாமனார் உயர்ந்தவர் ஆகிறார். தெய்வம் என்ன செய்தாலும் அதை மறுக்கக்கூடாது. பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மாமனார் ஜனகர் செய்தார். பொறுமைக்கு என்றும் பெருமை உண்டு. அதற்காக, அவளை ஜனக புத்திரி என்று வால்மீகி கொண்டாடுகிறார். அது மட்டுமா! மகரிஷிகள் கூட பல விஷயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க வருவார்கள். அரசாங்கம் கையில் இருந்தாலும் ராஜரிஷியாகவே அவர் விளங்கினார்.அப்படிப்பட்ட மகாஉத்தமியைக் காணாமல், ஆஞ்சநேயர் மனம் தளர்ந்த நிலையில், மதில் சுவர் ஒன்றைத் தாவினார். அவர் குதித்த இடம் ஒரு நந்தவனமாக இருந்தது. அங்கே அசோகம், ஆச்சா, செண்பகம், மாமரங்கள் ஏராளமாக இருந்தன. பட்சிகள் சந்தோஷமாக கீச்சிட்டுக் கொண்டிருந்தன. இருட்டு நேரம்...ஆஞ்சநேயர் அந்தப் பறவைகளை எழுப்பி விட்டார். அவை பறந்து போயின. அப்போது, மரங்களில் இருந்து உதிர்ந்த மலர் அவரை முழுமையாக நிரப்பியது. மரங்களை அவர் அசைத்த அசைப்பில் அவை இலைகளை முழுமையாக உதிர்த்து விட்டன.
அந்த நந்தவனத்தில் இருந்த பல வகை கொடிகளையும் அவர் அறுத்தெறிந்தார். சற்றுநேரத்தில் அந்த நந்தவனத்தின் பெரும்பகுதி அழிந்து போயிற்று. தன் வாலால் பல மரங்களை அவர் இழுத்து சாய்த்தார்.வால் என்று சொல்லும் போது பலருக்கும் ஒரு வழிபாடு நினைவுக்கு வரும். ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகிறவர்கள் அனுமானின் வாலில் பொட்டு வைத்து, வெண்ணெய் தடவி வழிபடுகிறார்கள். ஒரு குரங்கின் வாலை யாராவது வணங்குவார்களா? இதெல்லாம் மூடத்தனமாக தெரியவில்லையா? என்று விமர்சிப்பவர்களும் உண்டு. பிறகேன் வாலை வழிபடுகிறோம்?ரோம ரோமமு ராம நாமமே...ஆஞ்சநேயரின் உடலிலுள்ள ஒவ்வொரு தனி முடியும் கூட, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரது வாலை யாராலும் வெல்ல முடியாத சிலம்பக்கம்பு என்று கூறுவர். ஆம்...அது சுழன்றடித்தால் அதன் அருகே நிற்கும் சக்தி யாருக்கும் கிடையாது. அதில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், அதற்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது. அவரது வாலுக்கு பூஜை செய்தால், ஸ்ரீராமஜெயத்தை நோட்டுப் போட்டு எழுதவே வேண்டாம். ஏனெனில், அவரது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே எண்ணிக்கையற்றதாகும்.நந்தவனத்தின் தரையில் நவரத்தினங்களைப் பதித்திருந்தார்கள். பல இடங்களில் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. தவம் செய்வோர்க்கு ஏற்ற இடமாக அது தெரிந்தது. நிச்சயமாக, சீதாதேவி இங்கே நீராட வருவாள் என்று ஆஞ்சநேயர் நம்பினார். எல்லாத்திசைகளிலும் அவர் பார்வை சென்றது. அவர் நினைத்தது வீண்போகவில்லை. அந்த நந்தவனத்தில் யாகசாலை போல் கட்டப்பட்ட ஒரு மாளிகை இருந்தது. ஆயிரம் வெண்ணிற தூண்கள் அதில் காணப்பட்டன. தங்கத்தால் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மாளிகை அருகில் ஒரு பெண் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
அவள் நீண்ட நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்க வேண்டும். மிகவும் களைத்தும் இளைத்தும் போயிருந்தாள். உடலில் ஒரே அழுக்கு. குளித்து பல நாள் ஆகியிருக்க வேண்டும். ஒரு புடவை மட்டும் உடுத்தியிருந்தாள். அதுவும் கிழிந்து போயிருந்தது. ஆபரணங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை. கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. சுந்தரகாண்டம் படித்தால் மனதில் நம்பிக்கை வளரும் என்று சொன்னதே இந்தக் கட்டத்தைக் கருத்தில் கொண்டு தான்! சாட்சாத் மகாலட்சுமி பூமிக்கு வந்திருக்கிறாள். ராஜா வீட்டில் பிறந்திருக்கிறாள். ராஜா வீட்டில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். கணவனோ லோக நாயகனான ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமபிரான். இந்த உலக செல்வத்துக்கெல்லாம் அவளே அதிபதி. அப்படிப்பட்ட உத்தமிக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா! கிழிந்த புடவை கட்டியிருக்கிறாளாம்! நம்மிடம் செல்வம் நிறைய இருந்து, பங்கு மார்க்கெட்டில் கோட்டை விட்டுவிட்டால் மனசொடிந்து போகிறோம்! உயிரை விட எத்தனிக்கிறோம்! சோதனைகள் என்பது நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறோம். தெய்வமே பூமிக்கு வந்தாலும் கூட சோதனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இது இயற்கையின் நியதி! இறைவனின் நியதி! இதற்காக இறைவனைக் கடிந்து கொள்ளக்கூடாது. நம் முன்வினைப் பாவங்களே இந்த துன்பங்களுக்கெல்லாம் காரணமாகின்றன. சீதாதேவி, இப்பிறவியில் செய்த பாவத்தை இப்போதே அனுபவிக்கிறாள். என்னென்ன பாவம்...திரும்பவும் பார்ப்போமே! பொன் மான் மீது ஆசை...கொழுந்தன் மீது சந்தேகம்..அதன் விளைவாக கடிய சொற்களை உதிர்த்தது...போதாதா...இன்று அவள் இலங்கையிலே ராவணனின் பிடியில் வாடுகிறாள். அவளே சீதாப்பிராட்டி என ஆஞ்சநேயர் நிச்சயித்தார்.