பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
அவளைப் பார்த்தவுடன் ஆஞ்சநேயரின் முகத்தில் மிகுந்த சோகம் தென்பட்டது. ஜனகரின் அரண்மனையில் செல்வமகளாக பிறந்து, தசரதரின் வீட்டில் மகாராணி போல் குடிபுகுந்து, ஆடம்பரமான வாழ்வை மட்டுமே தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட அவள் இப்போது கம்மல், கர்ணப்பூ, சங்கிலி, மோதிரம் ஆகிய சாதாரண நகைகள் கூட இல்லாமல் சோகமே வடிவாக அமர்ந்திருந்தாள். ராமபிரான் ஆஞ்சநேயரிடம் சொல்லி அனுப்பியிருந்த பிற நகைகள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. எதையுமே விரும்பாமல் ராமனை மட்டுமே மனதில் நினைத்தவளாய் அவள் அமர்ந்திருக்கிறாள் என்று ஆஞ்சநேயர் உறுதிப்படுத்திக் கொண்டார். இதே நிலைமையைத்தான் ராமனும் அங்கே அனுபவித்துக் கொண்டிருந்தார். என் சீதையைப் பிரிந்த பிறகும் இந்த பாழும் உயிர் என் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறதே, என்று அவர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த இரண்டையும் ஆஞ்சநேயர் ஒப்பிட்டுப் பார்த்தார். சுந்தரகாண்டம் படிப்பதன் நோக்கமே பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வதற்குத்தான். பிரிந்தாலும், சேர்ந்திருந்தாலும் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே இந்தக்காட்சி நமக்கு வலியுறுத்துகிறது. ராமனும், சீதையும் பிரிந்திருந்த நிலையிலும் கூட மனதாலும், நினைவாலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, மிகவும் பிரியமாக இருப்பது கண்டு ஆஞ்சநேயர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார். உம்மையே மனதில் நினைத்து உம்மை விரைவில் திரும்பி அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவிரதா தர்மத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த உத்தமி மனைவியை அடைந்த நீர்தான் இந்த உலகிலேயே பாக்கியசாலி, என்று ராமனை நினைத்து பிரார்த்தனை செய்தார். இந்த சமயத்தில் எங்கோ ஒரு இடத்தில் வேத கோஷம் கேட்டது. ராட்சஷர்கள் சிலர் வேதம் ஓதியபடியே மங்கள வாத்தியம் இசைக்க, ராவணனை எழுப்பினர்.
எந்த நேரமும் அவன் சீதையின் நினைவுடனேயே இருந்ததால் விழித்த உடனேயே அசோகவனத்தை நோக்கி கிளம்பினான். அவனுடைய மனைவியர் அவன் பின்னால் வந்தனர். ஒரு பெண்ணின் கையில் இருந்த தங்க பாத்திரத்தில் சுவைமிக்க பானம் இருந்தது. மற்றொரு பெண் மதுபானம் ஏந்தியிருந்தாள். ஆயுதங்கள் புடைசூழ வீரர்கள் சிலர் வந்தனர். ராவணன் தனது கால்களில் சலங்கை அணிந்திருந்தான். அந்த சலங்கைகள் ஒலிக்க அவன் அசோகவனத்தில் மிகுந்த தோரணையுடன் நுழைந்தான். ஆஞ்சநேயர் அவனை கவனித்தார். அவனது நடையை வைத்தே அவன் மாபெரும் வீரன் என்பதை கணித்தார்.சீதையின் அருகில் ராவணன் வந்ததும் அவளது உடல் காற்றில் மாட்டிக்கொண்ட வாழையைப் போல நடுங்கியது. கைகளை உடலின் குறுக்காக கட்டிக்கொண்டு என்ன நடக்குமோ என பயந்த கண்களுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளது மனம் ராமபிரானை தியானித்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ராமனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே அவள் மனதில் இல்லை. வற்றிய நதியைப் போல அவளது முகம் காணப்பட்டது. அவளை கேச பாரம் மிக்கவள் என்பார்கள். அடர்த்தியான கூந்தலை உடைய அவளது பேரழகை ராவணன் ரசித்தான். ஆசையுடன் அவளுடன் பேச ஆரம்பித்தான்.அகலமான கண்களை உடையவளே! எல்லாரது உள்ளங்களையும் அபகரிப்பவளே! உன்மீது நான் கொண்டுள்ள ஆசையை இன்னும் ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்? என்னைக் கண்டு நீ நடுங்க வேண்டாம். இங்கேஎந்த ராட்சஷனும் அல்லது எந்த ஒரு மனிதனும் உனக்கு பயத்தை உருவாக்க முடியாது. நீயே மகாராணி! பிற பெண்களை பலாத்காரமாக கொண்டுவந்து மணமுடிக்க துடிப்பது நியாயம்தானா என்று நீ நினைக்கலாம்.
ராட்சஷர் இனத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு இது தர்மமே. இதில் சந்தேகமே கிடையாது. உன் மீது எனக்கு அளவற்ற ஆசை இருந்தாலும் உனக்கு என்மீது பிரியம் ஏற்படும் வரையில் உன்னைத் தொடமாட்டேன். அழகுசுந்தரியே! என்னை நீ நம்பலாம். உனக்கு இருக்கும் பேரழகிற்கு வெறும் தரையில் படுப்பதும், அழுக்கடைந்த ஆடையை அணிந்திருப்பதும் எந்தவித காரணமுமே இல்லாமல் உபவாசம் இருப்பதும் தகாத செயல்களாகும். உனது கூந்தலைக்கூட பின்னிக் கொள்ள மறுக்கிறாய். நீ என்னோடு அரண்மனைக்கு வந்துவிட்டால் அங்கே விதவிதமான ஆசனங்கள் இருக்கின்றன. ஆட்டம், பாட்டம், இசை என எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கலாம். என் தேசத்தில் இருப்பது போல் உயர்ந்த உணவு வகைகளும் பான வகைகளும் பிற இடங்களில் இல்லை, என்று ஆசை வார்த்தைகளைக் கொட்டினான்.தொடர்ந்து அவன் சீதையிடம் கெஞ்சாக் குறையாக பேசினான்.அழகு மிக்கவளே! உன்னைப் படைத்த பிறகு பிரம்மா இப்படிப்பட்ட உத்தமமான ரூபத்தை இனி என்னால் படைக்க முடியாது என்று நினைத்து படைக்கும் தொழிலையே விட்டுவிட்டான் என நினைக்கிறேன். உனக்கு முன்போ அல்லது உனக்குப் பிறகோ இந்த பூமியில் அழகியர் யாருமே பிறக்கவில்லை. பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தை உடையவளே! உன் தேகத்தில் என் கண்கள் எந்த இடத்தில் படுகிறதோ அங்கிருந்து என் பார்வையை திருப்ப முடியவில்லை. என்னைக் கணவனாக அடைந்தால் நீ பல நலன்களையும் அடையலாம். ஆனால் நீ அறிவின்மை காரணமாக அந்த ராமனையே நினைத்துக் கொண்டிருக்கிறாய். என்னை மணந்துகொண்டு நீ பட்டத்தரசியாக இரு. இந்த உலகத்தில் உள்ள அற்புதமான பல பொருட்களை எனது அரண்மனையில் வைத்திருக்கிறேன். இந்த லங்காபுரியையே உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறேன். வேண்டுமானால் இந்த பூமி முழுவதையும் ஜெயித்து உனது தந்தையான ஜனக மகாராஜாவிற்கும் கொடுக்க தயாராக இருக்கிறேன், என்று சொல்லத்தகாத பல வார்த்தைகளை பேசினான்.இதைக் கேட்டுக்கேட்டு சீதையின் மனம் துடித்தது.