பதிவு செய்த நாள்
30
ஆக
2022
01:08
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக பிரம்மாண்டமாக யாக சாலை தயாராகி வருகிறது.
சேலத்தில் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில், சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவிலில் செப்., 7 தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வரும், 1ம் தேதி யாக சாலை பூஜை துவங்குகிறது. இதற்காக இரு வாரங்களுக்கு முன் கோவிலின் கோசாலை அருகே உள்ள இடத்தில் பிரம்மாண்டமாக யாக சாலை அமைக்கும் பணி துவங்கியது. மாயவரத்தை சேர்ந்த ஸ்தபதி செல்வம் தலைமையில் நடக்கிறது. யாகசாலையில் குண்டங்கள் அமைத்தல், பிரம்மா, அஷ்டதிக் பாலகர், சூரியன், சந்திரன், ரிஷிகள், நந்தி, அம்மன், நந்தி உள்ளிட்ட சுவாமிகளின் சிலைகள், 63 நாயன்மார் மற்றும் சிவனின் படங்கள் என வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. தளம் அமைத்தல், சுவாமி சிலைகள் வைத்தல், அலங்கரித்தல் உள்ளிட்ட யாகசாலை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடக்கும் யாக சாலையில் சுகவனேஸ்வரர் சுவாமிக்கு, 9 யாக குண்டம், சொர்ணாம்பிகை அம்மனுக்கு, 9 யாக குண்டம், விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகிய சுவாமிகளுக்கு தலா, 5 என, 20 யாக குண்டம் வைக்கப்படும். அதேபோல் தட்சிணா மூர்த்தி, கால பைரவர், துர்க்கை, நவகிரகம், சண்டிகேஸ்வரி, கொடிமரம், விநாயகர் பரிவாரம், முருகன் பரிவாரம், நவகிரகம், 63 நாயன்மார்களின் மூலவர் மற்றும் உற்சவர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு, 16 யாக குண்டம் என மொத்தம், 54 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. யாக சாலையில், 700 கலசங்கள் வைக்கப்படும். ஹோம திரவியங்கள், 108 மூலிகைகள், அன்னம், 200 லிட்டருக்கு மேல் நெய், பழங்கள், பலகாரங்கள், பிரதான சுவாமிக்கு வஸ்திர சமர்ப்பணம் உள்ளிட்டவை யாகத்திற்காக பயன்படுத்தப்படும். யாக பூஜை செய்வதற்காக கும்பகோணம், பழனி, தஞ்சாவூர், கடலூர், மயிலாப்பூர், காஞ்சிபுரம், திருச்சி, சிவன் மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 120க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வருகை தர உள்ளனர். கும்பாபிேஷகத்துக்கு பின், 48 நாள் மண்டல பூஜை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.