பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 126 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேரளா பாலக்காட்டில் நடந்த இரு நாள் சங்கீத உற்சவம் நேற்று நிறைவடைந்தது.
பாலக்காடு செம்பை வித்யா பீடத்தில் நேற்று முன்தினம் துவங்கிய விழாவில் 120க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சங்கீத ஆராதனை நடத்தினர். நிறைவு நாளான நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை வித்யா பீடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சங்கீத ஆராதனை நடந்தது. காலை 11.30க்கு, செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் செம்பை வித்யா பீடத்தின் 37வது மாநாட்டை தரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமோத் துவக்கி வைத்தார். மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமை வதித்தார். மத்திய அரசின் பிரவாசி பாரதிய சம்மான்" விருதுக்கு தகுதி பெற்ற தொழிலதிபர் சித்திக் அஹமதை விழாவில் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களான தொழிலதிபர்களான அல்த்தாப் அலி, ரவிசங்கர், செம்பை வித்யா பீட தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து வயலின் வித்வான் ஒற்றப்பாலம் ஜெயதேவன், மிருதங்க வித்வான் ஆலுவா கோபாலகிருஷணன், முகர்சங்கில் வித்வான் வெள்ளிநேழி ரமேஷ் ஆகியோரின் பக்கவாதியத்தில் நடந்த மண்ணூர் ராஜகுமாரன் உண்ணியின் சங்கீதக் கச்சேரி அனைவரையும் கவர்ந்தது.