கருவூரார் சாபவிமோசன நிகழ்வு நெல்லையப்பர் இணை கோயிலில் பூஜை செய்யும் இளம் வக்கீல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2022 07:09
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலோடு இணைந்த அம்பலவாணர் சுவாமி கோயிலில் இளம் வக்கீல் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூஜை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி மூலத் திருவிழா பிரசித்தி பெற்றது. 18 தமிழ் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் 11ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ தலங்களை சென்று தரிசித்தவர். திருநெல்வேலிக்கு வந்தவர், நெல்லையப்பர் கோயில் முன்பு நின்று நெல்லையப்பரை அழைத்தார். திருவிளையாடல் நடத்தும் பொருட்டு அவருக்கு நெல்லையப்பர் மறுமொழி தரவில்லை. இதனால் ஆத்திரமுற்ற கருவூர் சித்தர் "ஈசன் எங்கு .. இங்கு எருக்கு எழ" என சாபமிட்டுவிட்டு நடை பயணமாக திருநெல்வேலி இருந்து 15 கிலோமீட்டர் தூரம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள அம்பலவாணர் சுவாமி கோயிலுக்கு சென்று விட்டார். அவரிடம் சாப விமோசனம் பெறும் வகையில் நெல்லையப்பர், சந்திரசேகரராக, பவானி அம்பாள்,பாண்டியராஜா, மற்றும் சண்டிகேஸ்வரர்,தாமிரபரணி, அகஸ்தியர், குங்கிலிய கலய நாயனார் ஆகியோருடன் பல்லக்கில் மானூர் அம்பலவாணர் சுவாமி கோயில் அடைந்தார். அவருக்கு காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்த நிகழ்வு ஆவணி மூல திருநாளில் இன்று செப்.,5ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. 900 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்று நிகழ்வில் இன்று மானூரில் உள்ளூர் திருவிழாவாக கோலாகலமாக நடக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள், திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.