பதிவு செய்த நாள்
09
செப்
2022
10:09
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது கோவில் முழுமையாக புனரமைக்கப்பட்டு, வரசித்தி விநாயகர், சிவன் பார்வதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், தென்முகப் பரமன், லிங்கேத்பவர், ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், கால பைரவர், நான்முகன், நவ நாயகர்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களுக்கும், தனித்தனி சன்னதிகள், கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவில் வளாகம் முழுவதும் சுற்று சுவர் கூடிய பெரிய முன் மண்டபம் எழுப்பப்பட்டு, வண்ணம் தீட்டி, பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது.
முதல் நாள் மங்கல இசை, திருவிளக்கு ஏற்றுதல் தொடர்ந்து முளைப்பாரி ஏந்தி வருதல், மாலை நில மகள் வழிபாடு, புனித நீர் வழிபாடு, வேள்விச்சாலை முதல் நிலை வழிபாடுகள், திருவாயில் வழிபாடுகள் நடக்கின்றன. இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் இரண்டாம் கால வேள்வி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மூன்றாம் நாளான, 12ம் தேதி காலை, 6.00 மணிக்கு வேள்விச்சாலை, மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு திருகாப்பு அணிவித்தல் தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.