மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா, விமர்சையாக நடந்தது. மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு குமரபுரத்தில், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 54ம் ஆண்டு திருவிழா, கடந்த மாதம், 30ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அனுதினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. ஆறாம் தேதி பவானி ஆற்றில் இருந்து, கோவிலுக்கு அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். ஏழாம் தேதி மதுரை வீரன் சுவாமி அழைப்பும், பொங்கல் வைத்து படையல் பூஜை செய்யப்பட்டது. பின்பு அன்னதானமும், மாலையில் மாவிளக்கு பூஜை செய்தனர். எட்டாம் தேதி மஞ்சள் நீராட்டும், மறு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.