பதிவு செய்த நாள்
12
செப்
2022
05:09
அன்னூர்: பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஹெலிகாப்டரில் மலர் தூவி கோலாகலமாக நடந்தது.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ளது கரியாகவுண்டனூர். இங்கு 70 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2014ல் திருப்பணி துவங்கியது. எட்டு ஆண்டுகளில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கருவறை, கோபுரம், அர்த்த மண்டபம் மற்றும் பாலமுருகன், ஐயப்பன் சன்னதிகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவில் கடந்த 10ம் தேதி காசி, கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஒன்பது புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களால் கும்ப கலச அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை 6:15 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் செல்வ விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிப் என்னும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் கோவிலின் மேலே நான்கு முறை வட்டமடித்து, 121 கிலோ பூக்களை கோபுரம் மீதும், பக்தர்கள் மீதும் தூவியது. கோவை புறநகரில் முதல் முறையாக ஹெலிகாப்டர் கோவில் கும்பாபிஷேகத்தில் மலர் தூவியதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் பல ஆயிரம் பேர் குவிந்தனர், ஹெலிகாப்டர் மலர் தூவுவதற்கு கட்டணமாக மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அந்த நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டது என கோவில் கமிட்டியினர் தெரிவித்தனர். பத்து நிமிடங்கள் வட்டமடித்த ஹெலிகாப்டர் பின்னர் மீண்டும் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது.