பதிவு செய்த நாள்
13
செப்
2022
08:09
மூணாறு: மூணாறில் ஓணப் பண்டிகை கொண்டாட்டம் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவு பெற்றது.
கேரளாவில் ஓணம் செப்.8ல் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி மூணாறில் ஊராட்சி தலைமையில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம், வர்த்தக சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் ஆகியோர் இணைந்து செப்.6,7,12 ஆகிய தேதிகளில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. செப்.6ல் பல்வேறு வகை கலைப் போட்டிகள், செப்.7ல் அத்தப்பூ கோலம் போட்டி ஆகியவை நடந்தன.
நிறைவு நாளான நேற்று பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி பழைய மூணாறில் இருந்து புறப்பட்ட கலாச்சார ஊர்வலத்தில் செண்டை மேளம் மற்றும் தையம், திருவாதிரை, மாவேலி மன்னன் ஆகிய வேஷங்களுடன் திருச்சூரைச் சேர்ந்த புலியாட்டம் ஆகியவை இடம் பெற்றன. அவற்றை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் ரசித்ததுடன் ஷெல்பி எடுத்து மகிழ்ந்தனர். தவிர முதன்முறையாக இடம் பெற்று புலியாட்டம் அனைவரையும் கவர்ந்தது.
கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்பட பல்வேறு போட்டிகளும் நடந்தன. அதன்பிறகு நடைபெற்று நிறைவு விழா கூட்டத்தில் மூணாறு ஊராட்சி தலைவர் பிரவீணா, துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலர் சகஜன், இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் பழனிவேல், மார்க்சிஸ்ட் கம்யூ., மூணாறு பகுதி செயலாளர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஓண சத்யா எனும் விருந்தில் முக்கியமாக இடம் பெறும் பாயாசம் வழங்கப்பட்டது.