பதிவு செய்த நாள்
21
ஆக
2012
10:08
ஓசூர்: ஓசூர் தர்கா சந்திராம்பிகை ஏரியை தூர்வாரி சுற்றுலாதலமாக்கும் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.ஓசூர் பெங்ளூரு சாலையில் தர்கா சந்திராம்பிகை ஏரியுள்ளது. இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வெளியே தெரியாதபடி கண்ணும் எட்டும் தூரம் வரை ஆகாயதாமரைச்செடிகள் நிறைந்து காணப்படுகிறது.சுற்றுவட்டார தொழிற்சாலைகள் கழிவு நீர், சாக்கடை நீர் இந்த ஏரியில் கலக்கின்றன. ஹோட்டல்கள், தொழிற்சாலை கழிவுகளை நள்ளிரவில் ஏரியில் கொட்டி செல்கின்றனர். இதனால், ஏரியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் தூர்நாற்றம் வீசுகிறது. ஏரியையொட்டி பெங்களூரு நான்கு வழிச்சாலை செல்வதால், சாலையில் செல்ல முடியாதபடி ஏரியின் தூர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.ஏரியில் ஆகாதாமரை செடிகள் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் மழை பெய்தாலும் இந்த ஏரியில் தண்ணீர் நிற்பதில்லை. அதனால், நகரின் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்துக்கு முன் டைட்டான் நிறுவனம், இந்த ஏரியில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரி ஆகாய தாமரை செடிகளை அகற்றி பராமரித்தனர்.அதன்பின், தொடர்ந்து இந்த ஏரியை யாரும் பராமரிக்க முன்வராததால், மீண்டும் ஏரியில் ஆகாய தாமரை செடிகள் நிறைந்து கழிவுகள் கலந்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு மாதம் முன் இந்த ஏரியின் அவலத்தை பார்த்து மாவட்ட நிர்வாகம், இந்த ஏரியை பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தூர்வாரி சுற்றுதலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மகேஸ்வரன் அறிவித்தார்.இந்த திட்டம் இது வரை நடை முறைப்படுத்தாமல் கிணற்றில் போட்ட கல்லாக காணப்படுகிறது. ஏரியை தூர்வார சமூக அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் தயராக உள்ளன. அந்த பொறுப்பை யார் எடுத்து செய்வது என்ற நிலையில்தான் இந்த திட்டம் கிடப்பில் கிடப்பதாக கூறப்படுகிறது. அதனால், ஏரி தூர்வாரப்பட்டு சுற்றுலாதலமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.