பதிவு செய்த நாள்
16
செப்
2022
07:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி சனி உற்ஸவத்தை முன்னிட்டு பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆண்டாள் கோயில் அலுவலகத்தில் நடந்தது.
இக்கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி சனி உற்சவம் 5 வாரங்கள் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் விருதுநகர், மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். வரும் செப்டம்பர் 24 அன்று புரட்டாசி முதல் சனி உற்சவம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கான ஆலோசனைக் கூட்டம், சப் கலெக்டர் பிரித்விராஜ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் முத்துராஜா, தாசில்தார் ராமசுப்பிரமணியன், டவுண் இன்ஸ்பெக்டர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், அரசு டாக்டர் காளிராஜ், தீயணைப்பு அலுவலர் குருசாமி, துறை பொதுப்பணித்துறை, நெடுஞ்சலைத்துறை, நகராட்சி, போக்குவரத்து, அறநிலையத்துறை, கல்லூரி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தயார்படுத்த சப் கலெக்டர் பிரித்திவிராஜ் அறிவுறுத்தினார்.