சுட்டெரிக்கும் வெயில் : ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2022 10:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து புனித நீராடினார்கள்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். நேற்று ஞாயிறு விடுமுறை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று வெயில் சுட்டெரித்த நிலையில், பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு சன்னதி தெரு, ரதவீதி வழியாக கோயில் வடக்கு வாசலில் நுழைந்து 22 தீர்த்தங்களை நீராடினார்கள். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வடக்கு ரத வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து பெரும் அவதியுடன் நீராட சென்றனர். ஓராண்டுக்கு கோயிலில் ரூ. 13 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தும், பக்தர்கள் நலனுக்காக சன்னதி தெரு, வடக்கு வீதியில் நிழல் தரும் பந்தல் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஹிந்து அறநிலையதுறையினர் கண்டு கொள்ளவில்லை என ஹிந்து அமைப்பினர் வேதனையுடன் தெரிவித்தனர்.