பதிவு செய்த நாள்
19
செப்
2022
11:09
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், 2020 நவம்பர் மாதம், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, கோவிலில் இருந்த வெள்ளி பல்லக்கை ஆய்வு செய்தபோது, அவை 200 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லக்கு என்பது தெரிய வந்தது. மேலும் 1,954ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்போது, வெள்ளிப்பல்லக்கில், 11 கிலோ வெள்ளி தகடு, இருந்ததாக அப்போதைய ஆய்வில் உள்ளதாகவும், இப்போதையை ஆய்வின்போது 8.800 கிலோ மட்டுமே இருப்பதாக கோவில் தரப்பில் சொல்லப்பட்டது.
மாயமான மூன்று கிலோ வெள்ளி தகடு குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின், அந்த நடவடிக்கைகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், தினேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், வெள்ளி பல்லக்கில் திருடுபோன வெள்ளி குறித்து செயலர், அலுவலர் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலர் போலீசில் புகார் அளித்தார்களா? என கேள்வி எழுப்பிஇருந்தார். அதற்கு, கோவில் தரப்பில், வெள்ளி பல்லக்கு அளவுகள் எடுக்கப்பட்டு, வெள்ளி தகடுகள் தேய்மானம் ஏற்பட்டதாகவும், இதனால் இழப்பு ஏதும் இல்லை என நகை சரிபார்ப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்; தகடுகள் ஏதும் திருடு போகவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.கோவில் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில், கேள்வி எழுப்பியவருக்கும், பக்தர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. வெள்ளி பல்லக்கில், பல இடங்களில் வெள்ளி தகடை பெயர்த்து எடுத்தது போல் பல்வேறு புகைப்படங்கள் உள்ளன.ஆனால், எந்த தகடும் திருடு போகவில்லை என, கோவில் தரப்பில் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.