50 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2022 01:09
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முத்தம்மாள்புரம் கிராமத்தில் காசி விஸ்வநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கால சம்ஹாரமூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தியின் 82.3 செ.மீ. உயரம் கொண்ட சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக போலி சிலையை வைத்து விட்டு சென்றனர். கோவில் செயல் அலுவலர் சுரேஷ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கடந்த 2020ம் ஆண்டு புகார் அளித்தார்.
அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார். இதையடுத்து, புதுச்சேரியின் பிரெஞ்சு நிறுவனத்தை தொடர்பு கொண்டு காசி விஸ்வநாத கோவிலில் எடுக்கப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி சிலைகளின் படங்களை பெற்ற பிறகு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியங்கள், கலைகூடங்கள், ஏல மையங்களில் சிலைகளை தேடுவதற்காக குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒரு விரிவான தேடலுக்கு பிறகு தற்போது கோவிலில் வழிப்பட்டு வரும் கால சம்ஹாரமூர்த்தி சிலை போலியானது என்பது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் உண்மையான சிலையானது அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து கால சம்ஹாரமூர்த்தி சிலையை மீட்டு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.