பதிவு செய்த நாள்
23
செப்
2022
06:09
சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் வருகின்ற 26 ம் தேதி துவங்கி அக்டோபர் 5 ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இந்த நவராத்திரி விழாவினை சிறப்பிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவிலின் உள்ளே பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் அழகிய பல கோலங்கள் வரையப்பட்டுள்ளன.
கோவில் மண்டபத்தில் வைப்பதற்காக பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பொம்மைகள் உள்பட ஆயிரக்கணக்கான தெய்வீக பொம்மைகள் அடுக்கவைக்கப்பட்டுள்ளன.இந்த வருட கொலு ‛சக்தி கொலுவாக அழைக்கப்படுகிறது,கொலு மண்டபத்தில் பாலாம்பிகை, வராஹியம்மன், ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, வைஷ்ணவிதேவி, சாமுண்டி, அன்னபூரணி, லலிதா பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகிய பொம்மைகளும்,அறுபடை வீடு முருகன் பொம்மைகளும் பிரதானமாக வடபழநி ஆண்டவர் உருவ பொம்மையும் இடம் பெற்றுள்ளன. இந்த பொம்மைகள் அனைத்தும் சுற்றுச்சுழலுக்கு குந்தகம் விளைவிக்காத துணிகளால் செய்யப்பட்ட பொம்மைகள் என்பது விசேஷமாகும். இதற்காக நங்கநல்லுாரில் சாய்கல்யாண் கிரியேன்ஸ் கார்த்தியாயினி தலைமையில் ஒரு குழுவே கடந்த சில நாட்களாக செயல்பட்டு வருகின்றனர். கொலுபார்க்கவரும் பக்தர்களுக்கு கொலுவின் மகாத்மியத்தை விளக்கும் புத்தகம் உள்ளீட்ட பிரசாத பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்படும்.கொலுநடைபெறும் பத்து நாட்களும் கொலுவின் சிறப்பினை விளக்கும் ஆன்மீக சொற்பொழிவு உள்ளீட்ட நிகழ்வுகள் நடைபெறும்.மேலும் கொலு நாட்களில் வேதபராயணம்,லலிதாசகஸ்ரநாமம் நிகழ்த்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை வடபழநி ஆண்டவர் கோயில் தக்கார் எல்.ஆதிமூலம்,நிர்வாக அதிகாரி முல்லை தலைமையிலான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.