மகாளய அமாவாசை : சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2022 04:09
கம்பம்: சுருளி அருவியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூட்டம் குவிந்தது. 53 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க வனத்துறையும் அனுமதி வழங்கியது.
மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஆடி, தை மற்றும் மகளாக அமாவாசை நாட்களில் கொடுப்பது சிறப்பானது. அவரவர் மறைந்த திதிகளை வைத்து ஆண்டுதோறும் தரப்பணம் செய்தாலும் இந்த மூன்று அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பாகும். அதிலும் மகாளய அமாவாசை மிக சிறப்பானதாகும். இன்று அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கார்களிலும், வேன்களிலும் சுருளி அருவியில் குவியத் துவங்கினார்கள். 53 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதித்திருந்த வனத்துறையும் நேற்று காலை மகாளய அமாவாசையை முன்னிட்டும், அருவியில் தண்ணீர் குறைந்ததாலும் குளிக்க அனுமதி வழங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அருவியில் குளித்து, ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் இங்குள்ள புராதானமான பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயில் சார்பில் காலை முதல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனடியார் முருகன் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானத்தை நடத்தினார்.