பதிவு செய்த நாள்
25
செப்
2022
04:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழா நடந்தது.
கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவில், வைணவ ஸ்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு புரட்டாசி சனிக்கிழமை விழாவும், மாசி மகத் தேர்த் திருவிழாவும், வெகு விமரிசையாக நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, தாசர்களுக்கு படையலிட்டு, பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. நேற்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3:30 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், கோவிலை வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு பக்தர்கள் தரிசனத்திற்கு விடப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். பின்பு கால சந்தி பூஜை, உச்சகால பூஜை நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தாரர்கள், அலுவலர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
கோவில் முன்பு ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தாசர்கள், வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பக்தர்கள் காய்கறிகள், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வழிபட்டனர். பின்பு தாசர்கள் கொடுத்த சிறிதளவு அரிசி, பருப்பு, காய்கறிகளை பக்தர்கள் பெற்றுச் சென்றனர். இன்று, 25ம் தேதி மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 26ம் தேதி நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகிறது. அக்டோபர் முதல் தேதி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், 4ம் தேதி சரஸ்வதி பூஜையும், 5ம் தேதி விஜயதசமியும், மற்றும் குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அம்பு போடும் நவராத்திரி உற்சவ விழா நடைபெற உள்ளது. எட்டாம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், 15ம் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.