பதிவு செய்த நாள்
26
செப்
2022
06:09
பல்லடம்: பல்லடம் அருகே, பிரத்திங்கிரா தேவி கோவிலில், மஹாளய அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, கோவில்களில் மஹாளய அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் அதர்வண பத்ரகாளி பீடத்தில், 16 அடி உயரம் கொண்ட பிரத்யங்கிரா தேவி அருள்பாலிக்கிறார். நேற்று, மஹாளய அமாவாசையை முன்னிட்டு, இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், பேய், பில்லி, சூனியம், பயம் உள்ளிட்டவற்றிலிருந்து காக்கும் நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று, அமாவாசையை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவிக்கு நடந்த சிறப்பு வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, வெள்ளி கவச அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.