திருச்சுழி: திருச்சுழியில் முன்னோர்களுக்கு மாஹாளய அமாவாசை தர்ப்பணம் ஏராளமான பக்தர்கள் செய்தனர்.
திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு நிகரானது. 14 பாண்டிய ஸ்தலங்களில் 10 வது ஸ்தலமாக திருச்சுழி உள்ளது. மாஹாலய அமாவாசைக்காக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தனர். பின்னர் திருமேனிநாதர் கோயிலில் விளக்கேற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிவாலய மடம் தன்னார்வ அமைப்பின் சார்பில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்ய வந்திருந்தனர். கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.