பதிவு செய்த நாள்
28
செப்
2022
12:09
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடக்கிறது. கோவை ஈஷாவில் உள்ள லிங்கபைரவியில் தேவியின் எல்லையில்லா அருளையும், சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிக சிறந்த காலமாக உள்ளது. இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நவராத்திரி விழாவின் முதல் நாளில் லிங்க பைரவி தேவி, துர்கையின் அம்சத்தை குறிக்கும் விதமாக குங்கும அபிஷேகத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து, லிங்க பைரவி தேவி உற்சவ மூர்த்தியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, நந்தியின் முன் மகா ஆரத்தி நடந்தது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் அம்சத்தையும், செப்., 29 முதல் அக்., 1 வரை லட்சுமியின் அம்சத்தை குறிக்கும் விதமாக, மஞ்சள் அபிஷேகத்திலும், அக்., 2 முதல் 4 வரை சரஸ்வதியின் அம்சத்தை குறிக்கும் விதமாக சந்தன அபிஷேகத்திலும், லிங்க பைரவி தேவி காட்சியளிக்கவுள்ளார். நாள்தோறும் மாலை, 6:00 மணி முதல் 7:45 மணி வரை, பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.