பதிவு செய்த நாள்
21
ஆக
2012
03:08
தர்மபுரி அருகிலுள்ள மொரப்பூர் ஸ்டேஷன்.. நள்ளிரவு வேளை.... தஞ்சாவூர் பக்கத்திலுள்ள துறையூரில் மறுநாள் நடக்க இருக்கும் ஒரு கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்த அந்த பெரியவர் ரயிலில் ஏற வந்தார். ரயிலுக்கு ஏக கூட்டம் காத்திருந்தது. முதல் வகுப்பு டிக்கட் கூட இல்லை. அலைபாய்ந்த பெரியவர், ஸ்டேஷன் மாஸ்டரை அணுகினார். சுவாமி, நீங்களா! உங்களைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! சரி...ஒரு டிக்கட் தருகிறேன். ஆனால், இடம் கிடைப்பது கஷ்டம்...வண்டி வரட்டும் பார்க்கலாம், என்றார். வண்டி வந்தது. கூட்டம் அடித்து பிடித்து ஏறியது. பெரியவரால் வாசல் படி அருகில் கூட செல்ல முடியவில்லை. முதல் வகுப்பில் உள்ளவர்களோ, கதவையே திறக்க மறுத்தனர். ஸ்டேஷன் மாஸ்டர் அவரை அழைத்துக்கொண்டு, கார்டு வேனுக்குச் சென்றார். சார்! இவர் அவசரமாக தஞ்சாவூர் போக வேண்டியுள்ளது. சேலம் வரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அங்கிருந்து மாறி போய்க் கொள்வார், என்றார். கார்டும் அரைகுறை மனதுடன் ஏற்றிக் கொண்டார். வண்டி கிளம்பியது. கார்டு, பெரியவரிடம், யாராச்சும் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் வாங்கிட்டு, இப்படி கார்டு வேனில் தரையில் உட்கார்ந்து வருவானா! சரி....நீர் போகாட்டி, அங்கே கும்பாபிஷேகம் நின்னு போயிடுமோ! என்று ஏளனமாகப் பேசினார். பெரியவர் பதிலே பேசவில்லை. திருப்புகழமிர்தம் என்ற மாத இதழை முகத்தை மறைத்த படியே படிக்க ஆரம்பித்தார். அதன் பெயரைப் பார்த்த கார்டு, இந்த பத்திரிகை எனக்கு மிகவும் பிடிக்குமே! இதன் ஆசிரியர் வாரியார் ஆயிற்றே! மாமிசம் சாப்பிட்ட நான், தைப் படித்த பின் மாறிவிட்டேன். எப்போதும் என்னைத் திட்டித் தீர்க்கும் என் மனைவி இதைப் படித்து அமைதியின் வடிவமாகி விட்டாள். சரி... வாரியாரை உங்களுக்கு தெரியுமா? என்றார். பெரியவர் அதற்கும் பதில் சொல்லவில்லை. ஆனால், கார்டு துளைத்து துளைத்துக் கேட்கவே, அதுதாங்க நானு! என்றார் பெரியவர். கார்டு கலங்கி விட்டார். ஐயா! நீங்கள் என் குரு. தாங்கள் யார் என அறியாமல் பேசி விட்டேன். இங்கே நடந்ததை ஏதாவது கூட்டத்தில் பேசி விடாதீர்கள். எனக்கு அவமானமாகி விடும், என்று மன்னிப்பு கேட்டார். ஈரோடு வரை அழைத்து வந்து, திருச்சிரயிலிலும் ஏற்றிவிட்டார். பால், பழம் கொடுத்து உபசரித்தார்.