பதிவு செய்த நாள்
01
அக்
2022
05:10
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, சோழர்கால சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்களை, போலீசார் கைப்பற்றினர்.
சோதனை: அமெரிக்கா வாழ் இந்தியரான ஒருவருக்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு ஒன்று உள்ளது. அங்கு, சோழர் கால சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு, தகவல் கிடைத்து உள்ளது. இதைஅடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், அந்த வீட்டில் சில தினங்களுக்கு முன் சோதனை செய்தனர். அங்கு, ஏழு சோழர் கால சிலைகளும், இரண்டு தஞ்சை ஓவியங்களும் இருந்தன.
விசாரணை: சிலைகளுக்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு, வீட்டில் இருந்தோருக்கு போலீசார் உத்தரவிட்டிருந்தனர். அவர்கள், ஆவணங்களை ஒப்படைக்கவில்லை.இந்த சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர், அமெரிக்காவில் உள்ளார். இதனால், இவரிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணர், பார்வதி என ஏழு வெண்கல சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவை, சோழர் காலத்திற்குரியவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்து விசாரணை நடக்கிறது. அமெரிக்காவில் வசிப்பவருக்கு விரைவில், சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.