பதிவு செய்த நாள்
03
அக்
2022
11:10
மனிதர்களின் நாக்கில் சரஸ்வதி இருக்கிறாள். கல்வியை அளிக்கும் கடமை அவளின் பணி. உயிர்களுக்கு ஞானப் பாலுாட்டி மோட்சத்தை அடைய வழி வகுக்கும் இவளுக்கு பல பெயர்கள் உள்ளன.
* சொல், வாக்கிற்கு அதிபதியாக விளங்குவதால் சரஸ்வதி, கலைமகள், பாரதி, வாணி, வாக்கிறைவி, வாக்கின் செல்வி, வாக்குத்தேவி, வாக்கு வாதினி, வித்யாதேவி, சொல்லிருங்கிழத்தி, சொற்கலையாள், சொல் மங்கை என போற்றப்படுகிறாள்.
* உயிர்களுக்கு ஞானத்தைப் புகட்டுவதால் ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞான அமலி, ஞான பிராட்டி, ஞானப் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள்.
* கவிஞர்களின் நாக்கில் குடியிருப்பதால் நாமடந்தை, நாமிசைக் கிழத்தி, நாவுக்கரசி என்றெல்லாம் துதிக்கப்படுகிறாள்
* கையில் வீணையேந்தி இசை மழை பொழிவதால் இசைக்காரிகை, இசைதனில் அமுதம் வடிப்பவள், இசை மடந்தை, இசைவாணி, உயரும் வீணைக் கரத்தினள் எனவும் இவளைப் போற்றுவர்.
* கலைக்கு அதிபதியாக இருப்பதால் கலை ஓதும் மலர்மாது, கலைக்கொடி, கலைஞானத் தோகை, கலைஞானவல்லி, கலைத்திருமடந்தை, கலைப்பெருமாட்டி, கலைமின்னாள், கலையணங்கு என்றெல்லாம் குறிப்பிடுவர்.
* பிரம்மாவின் மனைவியானதால் பிராமி எனவும், எல்லாவற்றையும் தாங்குவதால் பாரதி எனவும் அழைப்பர்.