பதிவு செய்த நாள்
22
ஆக
2012
11:08
புதுச்சேரியில் பல இடங்களில் தாகம் தணித்த கோவில் குளங்கள், சாக்கடை கழிவுநீர் கலந்து கண் எதிரே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கருவடிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே, மெயின் ரோட்டையொட்டி சுந்தர விநாயகர் கோவில் குளம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குளம் மழை நீரை சேகரிக்கும் வகையில் சிறப்பான வடிகால் வசதியுடன் மூன்று அடுக்குகளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.மழை காலங்களில், லாஸ்பேட்டை வெள்ளவாரி வாய்க்காலில் தண்ணீர் ஓடும் போதெல்லாம் கருவடிக்குப்பம் கோவில் குளத்தில் நீர் நிரம்பி, தாமரை, அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த குளத்தின் நீரை குடிக்கவும், குளிக்கவும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.பரந்து விரிந்து காணப்பட்ட கருவடிக்குப்பம் கோவில் குளம் காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி, தற்போது குட்டையாக சுருங்கிப் போய் விட்டது. கோவில் குளத்திற்கு நீர் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் கான்கிரிட் வீடுகளாக மாறியதால் குளத்திற்கு தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டு விட்டது. தற்போது இக்குளம் கழிவுநீர் சேரும் குட்டையாக மாறி விட்டது. கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதால் குளம் வேகமாக தூர்ந்து வருகிறது. மேலும், இக்குளத்தில் தொடர்ந்து விடப்படும் கழிவுநீர், நிலத்தடி நீரில் கலப்பதால், அப்பகுதியில் நீரின் தன்மை கெடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலுள்ள குளங்களின் கதி இப்படித் தான் உள்ளது. தாகம் தணித்த குளங்களெல்லாம் கழிவுநீர் குட்டைகளாக சுருங்கி, ஆகாயத் தாமரை படர்ந்து காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் ஏழு ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து குளங்களும், குளம் இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது.இது குறித்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகையில், "சாக்கடை நீரும் தண்ணீர் தான் என்று கருதி பலரும் கழிவு நீரை கோவில் குளத்தில் விடுகின்றனர்.
வீட்டில் இருந்து வெளியேறும் சோப்பு தண்ணீரில் நைட்ரேட், பாஸ்பேட் சத்துக்கள் அதிகமுள்ளன. இவை குளத்தில் கலக்கும்போது ஆகாயத் தாமரை போன்ற தேவையற்ற தாவரங்கள் அதிகமாக வளரும். பொதுவாக சூரிய ஒளி தண்ணீருக்குள் ஊடுருவும் போது தான் தண்ணீரில் ஆக்சிஜன் கரையும். குளத்தில் உயிர் வாழும் சூழலை ஏற்படுத்தும். ஆனால் ஆகாயத் தாமரை போன்ற தாவரங்கள் குளத்தின் மேல் படரும்போதும் தண்ணீருக்குள் ஆக்சிஜன் கரைவதை தடுத்து நிறுத்தி விடுகின்றன. இதனால் நீரின் அடியில் வாழும் மீன், நண்டு, தவளை, சிறிய வகை தாவரங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்து விடுகின்றன. இவை மட்கும்போது குளத்தில் எஞ்சியுள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால் ஆக்சிஜன் உற்பத்தி இல்லாமல், குளத்தில் உள்ள எல்லா உயிரினங்களுமே அழிந்து விடும். எல்லா உயிரினங்களும் ஒரு கட்டத்தில் இறந்த பிறகு, குளம் சேறும் சகதியாக மாறி மணல்மேடு மட்டுமே மீதமிருக்கும் என்று எச்சரிக்கின்றனர்.முன்னுதாரணமான காரைக்கால்கருவடிக்குப்பம் கோவில் குளத்தைப் போலவே, காரைக்கால் அம்மையார் கோவில் தெப்ப குளத்திலும் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் தேங்கி குட்டையாக சுருங்கியிருந்தது. மத்திய சுற்றுலாத் துறையின் 3.6 கோடி ரூபாய் நிதியில் இக் குளம் புனரமைக்கப்பட்டது. தற்போது குளத்தைச் சுற்றி அழகிய கற்கள் பதித்த நடைபாதை, பூங்கா, ஹைமாஸ் விளக்கு, தண்ணீரை சுத்தம் செய்ய மோட்டார் பம்ப், நடைப் பயிற்சி செய்பவர்கள் இளைப்பாற இருக்கைகள் அமைத்து, அழகாகக் காட்சி அளிக்கிறது. குளத்தைச் சுற்றியுள்ள பூங்காவில் ருத்ராட்சம், வன்னி, வில்வம் உள்ளிட்ட மரக் கன்றுகளும் நடப்பட்டுள்ளன. திருநள்ளார் சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் பக்தர்கள், தவறாமல் காரைக்கால் அம்மையார் குளத்தின் அழகையும் ரசித்துச் செல்கின்றனர்.காரைக்காலைப் பின்பற்றி, புதுச்சேரியில் கழிவுநீர் குட்டையாக மாறி உள்ள கோவில் குளங்களைத் தூர் வாரி, புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், நிலத்தடி நீராதாரமாக விளங்கும் குளங்களைப் பாதுகாக்க முடியும்.