பதிவு செய்த நாள்
06
அக்
2022
07:10
மைசூரு : கர்நாடக மாநிலம் மைசூரில், உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவின் பிரதான நிகழ்வான, ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று (அக்., 05) வெகு விமரிசையாக நடந்தது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி தேவி, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக எளிமையான முறையில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டது. இம்முறை தொற்று பரவல் குறைந்துள்ளதால், விமரிசையாக கொண்டாடுவதாக, கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி, இம்முறை 413வது தசரா விழாவை, செப்டம்பர் 26ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். துவக்க நாள் முதல், நேற்று முன்தினம் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் நடந்தன.
மன்னர் காலத்து பாரம்பரிய முறைப்படி, உடையார் வம்சத்தின் யதுவீர், வன்னி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். இதை பார்த்து மன்னர் காலத்து வைபோகம் மீண்டும் வந்தது போன்ற உணர்வு, பார்வையாளர்களுக்கு ஏற்பட்டது.அதன் பின், மதியம் 2:36 மணி முதல், 2:50 மணிக்குள் சுப மகர லக்னத்தில் அரண்மனையின் பலராமா நுழைவு பகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, நந்தி கொடிக்கு பூஜை செய்தார். இதன் மூலம் நாட்டுப்புற கலைகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆரம்பமானது. மாலை 5:36 மணிக்கு, 750 கிலோ உடைய தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, முதல்வர் பசவராஜ் பொம்மை, யதுவீர், மேயர் சிவகுமார், அமைச்சர்கள் சோமசேகர், சுனில்குமார் ஆகியோர் ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அரண்மனையில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள பன்னி மண்டபம் வரை ஊர்வலம் நடந்தது. வழி நெடுகிலும் இரு புறங்களிலும் மக்கள் வெள்ளம் போன்று நின்றிருந்தனர். இந்நிகழ்வுடன், மைசூரில் களைகட்டியிருந்த பத்து நாட்கள் தசரா விழா நிறைவுபெற்றது.